Saturday, December 09, 2006

யோகா - இந்தியாவின் கொடை

திரு.ஸ்ரீலிங்கம் அவர்களால் யூடா தமிழ்ச் சங்கத்தின் பனி மலருக்காக எழுதப்பட்டது.
=====================================================

நமது இந்தியா உலகுக்கு அறிமுகம் செய்த உன்னதமான பல விஷயங்களிலே யோகக் கலையும் ஒன்று. இந்த உன்னதக் கலையின் மேலான நன்மைகளை நாம் அறிந்திருக்கின்றோமோ இல்லையோ அமெரிக்கர்கள் வெகு நன்றாகவே அறிந்திருக்கின்றனர். அதனால் தான் போலும் அமெரிக்காவிலே ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 28ம் நாளை யோகா தினமாகக் கொண்டாடி வருகின்றனர்.

நம்மவர் வெகுவாகப் பயிலாத அல்லது பயன்படுத்தாத இந்த யோகக் கலையானது எப்படி யாரால் அமெரிக்காவுக்கு வந்தது என்பது பற்றி அலசுவதே இக்கட்டுரையின் நேர்க்கமாகும்.

1893-ம் ஆண்டு சிக்காகோ மாநகரிலே நடைபெற்ற உலக சமய மாநாட்டிலே, சுவாமி விவேகானந்தர் ஓர் பேருரை ஆற்றியது முதல் கிழக்கத்திய சிந்தனைகள் மேற்கு நோக்கி வரலாயின என்று சொல்லலாம்.

1920-ம் ஆண்டு சுவாமி பரமஹம்ச யோகானந்தா பாஸ்டனில் நடைபெற்ற ஒரு சமய மாநாட்டுக்காக அவரது குருவான பாபாஜி அவர்களால் அழைக்கப்பட்டார். 1920 முதல் 1935-ம் ஆண்டு வரை "கிரியா யோகாவை" அமெரிக்காவில் அறிமுகம் செய்ததோடு பல்லாயிரக் கணக்கானோருக்குப் பயிற்சியும் அளித்தார்.

1947-ம் ஆண்டு இந்திராதேவி என்பவர் ஹாலிவுட்டில் ஒரு யோகா பயிற்சி மையம் திறந்தார் என்றாலும் இக்காலகட்டத்தில், யோகா பற்றி அதிகளவு அறிவை, அமெரிக்கர்களுக்கு ஊட்டியவர் ரிச்சர்டு ஹிட்டல்மேல் என்பவராகும். இவர் யோகா பற்றி அதிகளவு புத்தகங்களை வெளியிட்டதோடு, 1961-ம் ஆண்டு முதல் தொலைக்காட்சி வாயிலாகவும் யோகாவைப் பரப்பியுள்ளார். இவர் ரமண மகரிஷியின் சிஷ்யராக இருந்த போதும், ஆன்மீகம் தவிர்த்த ஒரு யோகக்கலையை உடல் நலம் பேணல் என்ற கருத்தில் அறிமுகம் செய்தவராகும்.

1950-1960 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட பகுதியில், வால்ட் மற்றும் மெகானா பெப்டிஸ்ட் ஆகியோர் சான்பிரான்சிஸ்கோ பகுதியில் ஓர் யோகா மையத்தை நிறுவினார்.

1958-ம் ஆண்டு சுவாமி விஷ்ணு தேவானந்தா சான்பிரான்சிஸ்கோ நகருக்கு வந்து யோகப் பயிற்சி அளித்துள்ளார். அவர் எழுதிய THE COMPLETE ILLUSTRATED BOOK OF YOGA என்ற நூல் யோகக் கலைக்கான ஒரு வழிகாட்டியாக அமைந்துள்ளது .

1960-ம் ஆண்டு இமாலய மலைப் பிரதேசத்தில் இருந்து வந்த மகரிஷி மகேஷ் யோகி, ஒரு யோகா மற்றும் தியான மையத்தை நிறுவினார்.இவரது யோக, தியானம் மற்றும் ஆன்மீக வழியை பின்பற்றி 40,000 ஆசிரியர்கள் உருவாகியுள்ளனர்.மற்றும் 1200 மையங்கள் உருவாகியுள்ளன.சுமார் நான்கு கோடிபேர் இவரது போதனைகளை பின்பற்றி வருகின்றனர்.உலகெங்கும் சுமார் 108 நாடுகளில் இவரது மையங்கள் உள்ளன.

1960-ம் ஆண்டு யோகி அம்ரித் தேசாய் யோகக் கலையைப் பயிற்றுவிக்கத் தொடங்கினார்.1966ம் ஆண்டு பென்சில்வேனியாவில் யோக சபை ஒன்றை இவர் உருவாக்கினார்.

1966-ம் ஆண்டு பீ.கே.எஸ் ஐயங்காரின் புத்தகம் ஒன்று LIGHT OF YOGA என்ற பேரிலே அமெரிக்காவில் பிரசுரமானது.1973-ம் ஆண்டு மிச்சிகனுக்கு வரவழைக்கப்பட்ட இவர் தன் பணியைத் தொடங்கினார்.

யோகக் கலையை அமெரிக்காவில் பரப்பியவர்களுள் சுவாமி சச்சிதானந்தாவும் ஒருவராவார்.1966-ம் ஆண்டு நியுயார்க் வந்த இவர், விர்ஜினியா நகரிலே INTEGRAL YOGA INSTITUTE என்ற ஒன்றைத் தோற்றுவித்தார்.(தமிழகத்தில் கோயம்பத்தூர் ஆர்.எஸ்.புரத்தில் இதன் ஓர் கிளை உள்ளது.சுவாமி சச்சிதானந்தா இந்தியா வரும் பொழுதெல்லாம் இம் மையத்தில் பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.அதனை நேரில் கேட்கக் கூடிய பல சந்தர்ப்பங்கள் எனக்குக் கிட்டியதை நான் மிக மகிழ்வோடு நினைவு கூர்கின்றேன்)

இவ்வாறு பலரால் இங்கு அறிமுகம் செய்யப்பட்ட யோகக் கலை 1970-ம் ஆண்டளவில் மிகவும் பிரபல்யம் அடைந்த ஒன்றாகி விட்டது. இக்கால கட்டத்தில் பாபா ஹரிதாஸ், டி.கே.வி.தேசிகாச்சார், பட்டாபி ஜேர்ய்ஸ் போன்றோரும் தம் பங்களிப்பை ஆற்றியுள்ளனர்.

நமது யோகக் கலை அமெரிக்க மண்ணிலே மிகப் பிரபல்யம் அடைந்ததற்குக் காரணம் அது உடலுக்கு வலிமை தந்து, மன உளைச்சலைக் குறைத்து, மன அமைதியை ஏற்படுத்தக் கூடிய உடற் பயிற்சிகளையும், ஆசனங்களையும் கொண்டது என்ற ஓர் கருத்தேயாகும்.

அதனால் தான் போலும் சுமார் 20 கோடி அமெரிக்கர்கள் யோகப் பயிற்சி செய்து வருகின்றனர். யூட்டா போன்ற ஒரு சில மாநிலங்களைத் தவிர, மற்ற ஒவ்வொரு மாநிலத்திலும் நூற்றுக்கும் அதிகமான பயிற்சி மையங்கள் உள்ளன.

நம் நாட்டிலே உருவான இக்கலையானது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக உருவாகி வருவதும், ஆங்காங்கே பயிற்சி மையங்கள் ஏற்படடுத்தப்படுவதும், பள்ளிகளிலும் கூட போதிக்கப்படுவதும் நமக்கு மகிழ்வைத் தருகின்றது.

ஆன்மீகம், தீவிர அனுஸ்டானங்கள், சீரிய ஒழுக்கம் ஆகியன உள்ளடக்கப்பட்ட ஒன்று தான் யோகக் கலை என்ற கருத்து முன் வைக்கப்பட்டதால், சமூகத்தின் எல்லாதரப்பினரும் யோகக் கலையைப் பயில வேண்டும் என்ற ஆர்வம் காட்டவில்லை.

ஆனால், இன்று மேற்கூறிய காரணங்கள் முன்னிலைப்படுத்தப்படாமல் உடல் ஆரோக்கியம்,தியானம்,மன அமைதி போன்றன முன்னிலைப்படுத்தப்படுவதால் யோகக் கலை, இந்தியாவிலும் வெகுவாக வளர்ந்து வருகின்ற செய்தி நமக்கு பெறும் மகிழ்ச்சியூட்டுவதாக இருக்கின்றது.

0 Comments:

Post a Comment

<< Home