Tuesday, December 19, 2006

வந்தது பனிக்காலம்

திரு.ஸ்ரீலிங்கம் அவர்களால் யூடா தமிழ்ச் சங்கத்தின் பனிமலர் இதழுக்காக எழுதப்பட்டது.

விண்தொடும்
மலைச்சாரல்கள்
வெண்பனிப்
பெரும் தூறல்கள்
சில்லனவே
வீசும் மென்காற்று
மெல்லியதாய்
பனிப் பொலிவு.


பச்சை மரக்கிளைகள்
பசுமையினை தான் மறந்து
இச்சையுடன் வெண்பனியை
இறுகத்தான் தழுவியதே
உச்சிச் சூரியனின்
உஷ்ணம் பொருக்காது
வீசு மனற் காற்றிலே
வெண்பனியைத் துறந்ததுவே.

கருந்தரைகளெல்லாம்
கருப்பினைப் போக்கியே
விருப்புடன் வென்பூச்சை
வேண்டியே ஏற்றதுவே
சாலையில் வேகமாய்
சவாரிக்கும் வாகனங்கள்
மெல்லவே ஆமையாய்
முணுமுணுத்து ஊர்ந்ததுவே.

கையாலே பனிப்பந்தை
கவனமாய் உருட்டியே
பையவே பனிமனிதனை
பவ்வியமாய் உருவாக்கி
வீட்டுத் தோட்டத்தில்
வீறுடன் நிற்கவைத்து - சிறுவர்
கூடிக் களிக்கின்ற
தளிர்க் காலம் வந்ததுவே.


திருமதி அனுராதா அவர்களால் யூடா தமிழ்ச் சங்கத்தின் பனிமலருக்காக எழுதப்பட்டது.

மனிதத்தை மட்டும் அடிப்படையாக்கி

உலக நடப்புகளில் ஒற்றுமை
-ஒன்றில் மட்டும்!
உயிரின் மதிப்புணரா தீவிரவாதத்தில்!

இந்தியத் தாயின் நெற்றிப்பொட்டு - இன்று
நனைகிறது இரத்தச்சொட்டில்

காஷ்மீர் செடிகள்
துப்பாக்கிகளால் பூப்பூக்கின்றன

இராமாயணத்தை அலங்கரித்த இலங்கை
இன்று குருஷேத்திரக் களமாய்!

மத்தியக் கிழக்கென்ன விதிவிலக்கா?
மரபுகட்கு மதத்தினை மாலையாக்கியதில்
மானுடம் ஆவதோ சிதறல்களாய்

பயிர் அறுவடை நிறுத்திவிட்டு - உலகெங்கும்
உயிர் அறுவடை தொடங்கியதோ ?

அமைதியின் சரணாலயங்கள் கூட
அனுகுண்டுகளால் மரணாலயமாய்

அவரவர் வீடுகளே
அவரவர் கல்லரைகளாய் !

புண்ணாய்க் கிடக்கிறது வையகம்
மருந்திடல்த் தேவையில்லை தாமத்ம்.

அன்பெனும் (தீப)பந்தம் இருக்க
அம்பெனும் தீப்பந்தம் எதற்கு ?

அமைதிப் பேச்சுக்கள் தொடரட்டும்
அயர வேண்டாம் உடனடித் தோல்விக்காய் !

என் மானுட நண்பணே !
எல்லாம் ஒளிதான் ! - எனினும்
எரிகல்லாய் இராது
சூரியனாய் இரு!

தோட்டாக்காள் பறப்பது பெரிதல்ல
நினைவிருக்கட்டும் ஒன்றே ஒன்று
இந்நிலை தொடந்தால் - நாளை
உன் மழலை விளையாட - மண்ணல்ல
துப்பாக்கி ரவையே மிஞ்சும் !

மதத்தின் சாயம் தொலைத்து
நிறத்தின் பேதம் தகர்த்து
நினைவில் கொள்வோம்
மனிதத்தின் மகத்துவம் மட்டும் !

இமயம் இன்றும் இடிந்துவிடவில்லை
குமரி எங்கும் குறுகிவிடவில்லை

இன்னும் நம்பிக்கை இருக்கிறது
இளைய பாரதமாம் பிரவாகத்தின் மேல் !

நிதர்சனத்தில் தீவிரம் புரிந்து
நிறம், மதம், பேதம் மறந்து
மனிதத்தின் அடிப்படையில் இணைந்து
மானுடம் தளிர்க்கச் செய்வோம்.

0 Comments:

Post a Comment

<< Home